மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் விளையாடுவதற்காக வெளியே சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதறிப் போன குடும்பத்தினர் அருகில் உள்ள இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் சிறுமியை கிடைக்காததால் உடனே போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை சிறுமி விளையாடுவதற்காக எடுத்துச் சென்ற வாளி பக்கத்து வீட்டு வாசலில் கிடந்ததை கண்ட போலீசார் சந்தேகத்தின் பெயரில் பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அதில் சாகு பையில் சிறுமி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல் அனுப்பப்பட்ட நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரான 33 வயது வாலிபரை தேடினர். அவர் பீகார் மாநிலம் தப்பி சென்றது தெரியவந்த நிலையில் போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதாவது அந்த நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு இதேபோல ஆறு வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போது போலீஸ் காவலில் இருந்து தப்பியதும் தெரிய வந்தது. இந்நிலையில் அந்த ஆசாமி மீண்டும் வீட்டுக்கு திரும்பி விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
