உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில், வணிக வளாகக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் தம்பதியரின் 7 வயது மகள் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாயமானார். பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் அவர்கள் வேலை செய்யும் அதே கட்டிடத்தின் அடித்தளப் பகுதியில் அச்சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உடற்கூறாய்வு முடிவுகளில், சிறுமியின் உடம்பில் பல இடங்களில் எலும்பு முறிவுகளும், தலையில் பலத்த காயங்களும் இருப்பது கண்டறியப்பட்டதுடன், அவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக் கொடூரச் செயல் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் கொலை, வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விபரீத மரணம் குறித்துத் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் 5 நபர்களைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
