இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் (RRB) பணிபுரிய வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. இக்கனவை நனவாக்கும் வகையில், நாடு முழுவதும் காலியாக உள்ள 6,565 டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘டெக்னீஷியன் கிரேடு – I (சிக்னல்)’ பிரிவில் 323 இடங்களும், ‘டெக்னீஷியன் கிரேடு – III’ பிரிவில் 6,242 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. கிரேடு – I பணிக்கு இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி பிரிவில் பி.எஸ்சி, டிப்ளமோ அல்லது பி.இ/பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கிரேடு – III பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ (ITI) அல்லது அப்ரெண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வரம்பைப் பொறுத்தவரை, கிரேடு-I பணிக்கு 18 முதல் 33 வயதிற்குள்ளும், கிரேடு-III பணிக்கு 18 முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கிரேடு-I பிரிவில் ரூ.29,200/- என்ற அடிப்படையிலும், கிரேடு-III பிரிவில் லெவல் 2-ன் படி ரூ.19,900/- முதல் ஆரம்பச் சம்பளமாக வழங்கப்படும்.
தகுதியான நபர்கள் கணினி வழித் தேர்வு (CBT), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் தேர்வு எழுதிய பிறகு ரூ.400 விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கிற்கே திருப்பித் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
