மும்பையில் பயங்கரம்… போனில் பேசிக்கொண்டே நடந்தவருக்கு நேர்ந்த விபரீதம்… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு இடையே, சாகிநாகா பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்த 55 வயது முதியவர் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சாகிநாகாவின் யாதவ் நகரைச் சேர்ந்த அஸ்லாம் இசாக் ஷேக் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கைபேசியில் பேசிக்கொண்டே நடந்து சென்றபோது, அங்கு தனியார் ஒப்பந்ததாரரால் பழுதுபார்க்கப்பட்டு மூடப்படாமல் இருந்த சாக்கடைப் பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளார். இந்த நெஞ்சை உலுக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்த மும்பை தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சாக்கடைக் கால்வாயில் இருந்து அவரது உடலை மீட்டனர்.

தொடர் கனமழை காரணமாக மும்பையின் பல தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும், அபாயகரமான சூழலும் நிலவி வரும் நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், தகிசர் பகுதியில் உள்ள வேகமான நீர்வரத்து கொண்ட கால்வாயில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு நபரை, மும்பை காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து சாதுரியமாக மீட்டுள்ளனர். இதுகுறித்த மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பருவமழை காலங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.