உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கெஜா கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது கனமான இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணீஷ் என்பவரின் மகனான நவதீப் என்ற சிறுவன், சனிக்கிழமை காலை தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் போது, சிறுவன் நவதீப் பக்கத்து வீட்டின் இரும்பு கேட் மீது ஏறி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கேட்டின் கீல்கள் உடைந்ததால், அந்த கனமான இரும்பு கதவு சிறுவன் மீது பலமாக விழுந்தது. இதில் கேட்டின் அடியில் சிக்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த பதறவைக்கும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேட் விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிறுவனை மீட்டனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பே அவன் உயிரிழந்துவிட்டான். பழைய இரும்பு கேட்டுகள் மற்றும் கட்டிடங்களைச் சரியாகப் பராமரிக்காததே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
