“சாகும் போதும் பிரியக்கூடாது”…. இடுப்பில் துணியைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்…. கரூரை உலுக்கிய துயரச் சம்பவம்…..!

By Nanthini on கார்த்திகை 19, 2026

Spread the love

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள சின்ன காளிபாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி (63), அவரது மனைவி ஜானகி (60), மகள் சுகுணா (35) மற்றும் சுகுணாவின் குழந்தைகளான சிவானி (10), ஆதிரன் (4) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவரைத் திருமணம் செய்திருந்த சுகுணா, கணவருடனான குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால், தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று ராமசாமிக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் ஐந்து பேரின் உடல்கள் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சடலங்களைப் பார்வையிட்டபோது, கடைசி நேரத்திலும் ஒருவரையொருவர் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக, ஐந்து பேரும் தங்களது இடுப்பில் துணியால் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

   

தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்து ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சுகுணா மற்றும் அவரது கணவர் பிரபு இடையே நிலவிய குடும்பப் பிரச்சினை மட்டுமே இந்தத் தற்கொலைக்குக் காரணமா அல்லது கடன் சுமை உள்ளிட்ட வேறு ஏதேனும் அழுத்தங்கள் இக்குடும்பத்திற்கு இருந்ததா என்ற பல்வேறு கோணங்களில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.