தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்கிய நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் 49 வயதான அமுதவல்லி என்பவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. இதில் ஆச்சரிய தகவல் என்னவென்றால் இவருடைய மகளும் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் எம்பிபிஎஸ் பொது கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 49 வயதான பிசியோதெரபிஸ்ட் சமூகவல்லி எம் பி பி எஸ் கலந்தாய்வில் பங்கேற்ற விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து இடம் பிடித்துள்ளார். அவருக்கு உதவியாக வந்த அவருடைய மகள் சம்யுக்தா கிருபாளினி நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் எடுத்து எம்பிபிஎஸ் பொது பிரிவு கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றார்.
மேலும் விண்ணப்பத்தில் பாதுகாவலர் என்ற இடத்தில் தாயார் அமுதவல்லிக்கு மகள் கையொப்பம் போட்டுள்ளார். சம்யுக்தா மருத்துவ படிப்பில் சேர்ந்தால் தாயும் மகளும் ஒரே நேரத்தில் எம்பிபிஎஸ் படிக்கிறார்கள் என்ற சாதனையாகவும் இது அமையும். நீட் தேர்வில் வயது வரம்பு இல்லாததால் மாற்றுத்திறனாளி என அமுதவல்லி தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார். நீட் தேர்வில் 147 மதிப்பெண்கள் பெற்றுள்ள இவர் தனது சொந்த மாவட்டமான தென்காசிக்கு அருகில் உள்ள விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார்.
அமுதவல்லி தன்னுடைய மகள் சம்யுக்தா இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாரானதை பார்த்து அவரும் நீட் தேர்வு எழுத ஊக்கம் பெற்று தன் மகளின் புத்தகங்களை வாங்கி படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அமுதவல்லி தான் பள்ளி படிப்பை முடித்த பிறகு 30 வருடங்களுக்கு முன்னர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முயற்சி செய்ததாகவும் ஆனால் அது தோல்வி அடைந்த காரணத்தால் பிசியோதெரபி படிப்பை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தாயும் மகளும் ஒரே நேரத்தில் எம் பி பி எஸ் படிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
