இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தித் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற இரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது மொத்தம் 49 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். எனவே, மத்திய அரசு உடனடியாகத் தகுந்த தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் திரும்பச் செய்ய வேண்டும் என அக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
