உத்தரகாண்டின் பௌரி மாவட்டத்தில் கண்டியூசைன் பகுதியில், தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி ஆரூஷி சிறுத்தையின் தாக்குதலுக்கு இரையாகி உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை வேளையில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சிறுத்தை, அச்சிறுமியைக் கவ்விக்கொண்டு அருகிலிருந்த அடர்ந்த புதர்களுக்குள் இழுத்துச் சென்றது. இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் உடனே அப்பகுதியில் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு, சிறுமியின் வீடு அமைந்திருந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது. தன் கண்ணெதிரே குழந்தையைப் பறிகொடுத்த குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை விவரிக்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும், வனத்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், தொடர்ந்து அதிகரித்து வரும் வனவிலங்கு தாக்குதல்களுக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தியும் அப்பகுதி கிராம மக்களிடையே கடும் கோபமும் கொந்தளிப்பும் வெடித்தது.
https://twitter.com/aajtak/status/2117885890576158992/video/1
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பௌரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் போரி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனித உயிருக்குப் அச்சுறுத்தலாக விளங்கும் அந்தச் சிறுத்தையைப் பிடிப்பதற்கோ அல்லது சுட்டு வீழ்த்துவதற்கோ உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறும் வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தினார்.
