இந்திய வீடுகள் மற்றும் கோயில் அறக்கட்டளைகளில் சுமார் 30,000 முதல் 32,000 டன் வரை தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகின் பல நாடுகளின் மத்திய வங்கிகளின் இருப்பை விட அதிகம். இந்தியாவில் தங்கம் தலைமுறைகள் கடந்த சேமிப்பாகவும் முதலீடாகவும் பார்க்கப்பட்டாலும், உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ளதால் பெரும்பாலான தங்கம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 72.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது; இந்த மிகப்பெரிய இறக்குமதியால் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படுகிறது.
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் பழைய நகைகள், நாணயங்களை உருக்கி, தூய தங்கமாக மாற்றுவதே தங்க மறுசுழற்சி எனப்படும். இந்தியாவிலுள்ள மொத்த தங்கத்தில் ஆண்டுக்கு வெறும் 1 சதவீதம் (சுமார் 320 டன்) மறுசுழற்சி செய்யப்பட்டால் கூட, நாட்டின் ஆண்டு தங்க இறக்குமதியை 25 முதல் 30 சதவீதம் வரை குறைக்க முடியும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னிய செலாவணி சேமிக்கப்படுவதுடன், வர்த்தக பற்றாக்குறை குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பும் நிலைபெறும்.
கோயில்களில் உள்ள தங்கத்தைப் பயன்படுத்துவது உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், மத்திய அரசு இதில் கட்டாய நடவடிக்கைகளைத் தவிர்த்து தன்னார்வ திட்டங்களையே ஊக்குவித்து வருகிறது. தற்போது தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், பழைய தங்கத்தை புதிய ஆபரணங்களாக மாற்றும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. வீட்டில் முடங்கியிருக்கும் தங்கம் பொருளாதாரச் சுழற்சிக்குள் வந்தால், நாட்டின் பொருளாதார வலிமை மேலும் அதிகரிக்கும் என்பதால், “புதிய தங்கத்தை வாங்குவதற்கு முன் பழைய தங்கத்தை பொருளாதார பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்” என்பதை அரசு வலியுறுத்துகிறது.
