கட்டுக்கடங்காத கூட்டம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை… பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 14, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மராட்டா, மேதார் ஓணி மற்றும் கலால் ஓணி ஆகிய 3 பகுதிகளைச் சேர்ந்த ஊர்வலங்களும் ஒரே நேரத்தில் இரவு 9.30 மணியளவில் சி.பி.டி. சாலையை வந்தடைந்ததால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது.

டி.ஜே. இசையுடன் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்திச் சிலர் அங்கிருந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிடவே, அவர்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களைப் பொதுமக்கள் தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளும் வன்முறைச் சூழலும் ஏற்பட்டது.

   

நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அவர்கள் அதிரடியாகத் தடியடி நடத்தி மக்களை நாலாபுறமும் சிதறி ஓடச் செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுவரை 30 பெண்கள் பாலியல் தொல்லை குறித்துப் புகார் அளித்துள்ளதாக உப்பள்ளி-தார்வார் போலீஸ் கமிஷனர் பூஷண் போரசே தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்கச் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.