“தலைமுடியை பிடுங்கி… 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்”…. சிவகாசியில் உறைைய வைக்கும் சம்பவம்…!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

சிவகாசி அருகே மூன்று வயது பெண் குழந்தை சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே வைகோ நகரைச் சேர்ந்த சுவாதி (22) என்பவருக்கும் துரைப்பாண்டி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, விஷ்ணுபிரியா (3) என்ற பெண் குழந்தை இருந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுவாதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

தனித்து வாழ்ந்து வந்த சுவாதி, வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போது அங்கேயே பணிபுரிந்து வந்த சிவகாசி பேராபட்டியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது நெருக்கமாக மாறவே, இருவரும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, திருத்தங்கல் பசும்பொன் நகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

   

இந்நிலையில், நேற்று இரவு விக்னேஷ்வரன் மதுபோதையில் சுவாதியையும் அவரது மூன்று வயது குழந்தை விஷ்ணுபிரியாவையும் கடுமையாகத் தாக்கிச் சித்ரவதை செய்துள்ளார். இதில் குழந்தையின் தலைமுடியைப் பிடுங்கி, கொடூரமாகத் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். தகவலறிந்து வந்த திருத்தங்கல் காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷ்வரனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.