“தலைமுடி வழியாக புது வைரஸ்?”…. மொட்டை அடித்தால் ரூ.45,000… வாட்ஸ்அப் போட்டோவை நம்பி ஏமாந்த பெண்கள்…. சேலத்தில் அரங்கேறிய வினோத சைபர் மோசடி….!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, அரசு நிதி உதவி வழங்குவதாகக் கூறி பெண்களை மொட்டை அடிக்க வைத்து மர்ம நபர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புதுகொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த நபர், தன்னை வட்டாட்சியர் எனக் அறிமுகப்படுத்திக் கொண்டு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அவர் குடும்பத்தினரின் பெயர்களையும் சரியாகக் கூறியதால், கிராம மக்கள் அதை உண்மை என நம்பியுள்ளனர்.

கொரோனா போல தலைமுடி வழியாக ஒரு புதிய நோய் பரவி வருவதாகவும், அதிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் மக்கள் மொட்டை அடித்துக் கொள்வதாகவும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார். அதோடு நிற்காமல், அரசின் சார்பில் மொட்டை அடித்துக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.15,000, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.45,000 உடன் இலவச மடிக்கணினி, ஆண்களுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என ஆசைகாட்டியுள்ளார். இதற்காகத் தனது கிராமத்திற்கு 18 டோக்கன்கள் மட்டுமே உள்ளதாகக் கூறி அவசரப்படுத்தியுள்ளார்.

   

வாட்ஸ்அப் வழியே ஏற்கனவே மொட்டை அடித்தவர்களின் படங்கள் மற்றும் பணக் கட்டுகளின் புகைப்படங்களை அனுப்பி அந்த நபர் நம்பவைத்துள்ளார். பணம் வழங்க அதிகாரிகள் டேபிள், சேர் போட்டுத் தயார் நிலையில் இருப்பதாகக் கூறியதை அடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த காவேரி, ராமாயி, சித்ரா ஆகிய 3 பெண்கள் உடனடியாக மொட்டை அடித்துக் கொண்டனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்த நிலையில், பணத்தைப் பெற அந்த நபரைத் தொடர்புகொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

   

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த கிராம மக்கள், இதுபோன்ற சைபர் மோசடிகளில் ஈடுபட்ட மர்ம நபரை விரைந்து தீவிரமாகத் தேடி, அவர் மீது அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.