சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகண்டை கூட்டு சாலை அருகே நேற்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டி சென்ற காரும் திருக்கோவிலூர் நோக்கி சென்ற நாராயணன் என்பவர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நாராயணன்(22) அவரது தந்தை ஆறுமுகம், தாய் செல்லியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த நாராயணனுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி திருமணம் என்பதால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு ஊர் திரும்பும் போது இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. மாப்பிள்ளை உயிரிழந்த செய்தியை கேட்ட பெண் வீட்டாரும் சோகத்தில் உள்ளனர்.
