ஒரே இருட்டு, பள்ளி வகுப்பறையில் இரவு முழுவதும் பூட்டப்பட்ட 2 ஆம் வகுப்பு மாணவி… மறுநாள் காலை காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on ஆவணி 23, 2025

Spread the love

ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் இரவு முழுவதும் பள்ளிக்குள் பூட்டப்பட்டு மறுநாள் காலை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மற்ற மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகு அந்த மாணவி உள்ளே இருந்ததை கவனிக்காமல் பள்ளியின் வாட்ச்மேன் பிரதான வாயிலை பூட்டி உள்ளார். இரவு முழுவதும் அந்த மாணவி வீட்டுக்கு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்த நிலையில் கிராம மக்கள் உதவியுடன் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். இதனிடையே பள்ளிக்குள் சிக்கிக்கொண்ட அந்த மாணவி அங்கிருந்து வெளியேற முயற்சி செய்து உள்ளார். வகுப்பறையின் ஜன்னலில் இருந்த இரும்பு கம்பிகளை உடைத்து அதன் வழியாக வெளியேற முயன்ற போது அவர் தலை அதில் மாட்டிக்கொண்டது.

இதனால் மாணவிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. மறுநாள் காலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் மாணவி ஜன்னலில் சிக்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் மாணவியை சிரமப்பட்டு மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மாணவி நன்றாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.