By Swetha on வைகாசி 9, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் அதன் பலம் 116 ஆக உயர்ந்திருந்தது. விசிக-வின் ஆதரவு கிடைத்தால் எளிதாக ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் இருந்தபோதிலும், எதிர்பாராத விதமாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள அமமுக எம்.எல்.ஏ காமராஜிடம் தவெக ஆதரவு கோரியது. கொள்கை ரீதியாகத் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஈர்க்க முயன்று வந்த விஜய், திடீரென பாஜாக அங்கம் வகிக்கும் என்.டி.ஏ கூட்டணியைச் சார்ந்த கட்சியிடம் சென்றது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அமமுக ஆதரவைப் பெற முயன்ற இந்த நடவடிக்கையைத் தவெக எடுத்த தற்கொலை முடிவாகவே அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர். தவெக தரப்பில் குதிரை பேரம் நடப்பதாக டிடிவி தினகரன் நேரடியாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, விசிக போன்ற கட்சிகள் ஆதரவு அளித்தாலும், ஆளுநர் இதனைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகவும், விசாரணைக்காகக் கால அவகாசம் எடுத்துக்கொண்டு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் தவெக-வே வழிவகை செய்து கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

பாஜக விரித்த அரசியல் வலையில் தவெக தானாகவே வந்து விழுந்துவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், தவெக தரப்பில் விளக்கமளிக்கையில், அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தாமாகவே முன்வந்து ஆதரவு அளித்ததாகவும், அதனை ஏற்றுக்கொண்டது இவ்வளவு பெரிய அரசியல் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் விஜய்யின் அரசியல் பிம்பம் சேதமடைந்துள்ளதோடு, தவெக ஆட்சி அமைப்பதிலும் பெரும் சிக்கல்கள் நீடிக்கின்றன.