விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் காயமடைந்த ஆலைத் தொழிலாளர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவலர்கள் என மொத்தம் 21 பேர் தற்போது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இது குறித்து தெரிவிக்கையில், உயிரிழந்தவர்களில் 20 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
