இந்தியாவில் சட்டப்பூர்வ திருமண வயது ஆண்களுக்கு 21 என்றும், பெண்களுக்கு 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறார் திருமணங்கள் ஆங்காங்கே தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. வழக்கமாக இத்தகைய சம்பவங்களில் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படும் நிலையில், பீகாரில் சற்று வித்தியாசமாக 17 வயது சிறுவன் ஒருவன் சிறார் திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ள விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில், பூஜா குமாரி என்ற இளம்பெண் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்திருக்கிறது. தற்காலத்தில் தங்களை விட வயதில் இளையவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பரவலாக இருந்தாலும், 18 வயது நிரம்பாத சிறுவனைத் திருமணம் செய்வது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்பதை அறியாமல், பூஜா அந்த சிறுவனுடன் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் ஊருக்குள் அரசல் புரசலாகத் தெரியவர, உறவினர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இருப்பினும், எதையும் பொருட்படுத்தாத இந்த ஜோடி, சினிமா பாணியில் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளது. பின்னர், இருவரும் மாலை மாற்றிய திருமணக் கோலத்திலேயே தங்களது ஊருக்குள் தைரியமாக நுழைந்துள்ளனர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நடுரோட்டிலேயே இளம்பெண் பூஜாவைத் தடுத்து நிறுத்தி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பூஜாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கிய இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் திருமண எதிர்ப்பிற்கு வயது ஒரு காரணமாக இருந்தாலும், இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந்த வன்முறைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
