ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணை (22) மர்ம நபர்கள் ஓடும் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொடூர செயலுக்குப் பிறகு அந்தப் பெண்ணை சாலையோரம் வீசி எறிந்து விட்டு குற்றவாளிகள் தப்பி சென்று விட்டனர். தலைநகரம் டெல்லிக்கு மிக அருகாமையில் நடந்த இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் மாலை நேரத்தில் தன்னுடைய அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது வழியில் வாகனம் ஒன்றில் வந்த நான்கு பேர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வாகனத்திற்குள் இழுத்துச் சென்றனர்.
பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனைப் பார்த்த அந்தப் பெண்ணின் சக ஊழியர்கள் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை சுமார் 2 மணி நேரமாக ஓடும் காரிலேயே வைத்து அந்த நான்கு பேரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தாக்குதலின் போது அந்த பெண்ணின் கைபேசியை அணைத்து வைத்து அவர்கள் அவரிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர்.
பிறகு பல்கபூர் மற்றும் சிக்ரி ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு பெட்ரோல் நிலையம் அருகே மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை வாகனத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டனர். காவல்துறையினர் உடனடியாக சிறப்பு படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிர படுத்திய நிலையில் அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதும் தலையில் பலத்த அடி விழுந்து உள்ளதும் தெரியவந்துள்ளது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். குற்றவாளிகள் குறித்த இதுவரை எந்த விவரமும் அறியப்படவில்லை.
