புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை அருகே விராலிமலை சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடியபடி அலறியடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பேருந்திற்குள் சிக்கியிருந்த பயணிகளைப் போராடி மீட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 22 பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததா அல்லது இயந்திரக் கோளாறா என்பது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
