சென்னையின் அடையாளமாக இருக்கும் ஹோட்டல் சரவணபவனில் கடந்த 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உணவக ரசீது ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 15 ஆண்டுகளில் விலைவாசி மற்றும் பணவீக்கம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை இது காட்டுகின்றது. அந்த ரசீதில் ஒரு பிளேட் இட்லி வெறும் ரூ.14.50க்கும், சப்பாத்தி ஒரு செட் 26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே மினி ஃபில்டர் காப்பியின் விலை வெறும் 8.83 ரூபாய் மட்டுமே. அன்றைய வரி விகிதங்களுடன் சேர்த்து பில்லின் மொத்த தொகை வெறும் 50 ரூபாய் என ரசீதில் உள்ளது.
இன்றைய சூழலில் இதே உணவுகளின் விலை சரவணபவனில் 200 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய பழைய நினைவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். பத்து வருடங்களுக்கு மேலாகியும் அந்த ரசீதில் உள்ள மை அழியாமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிலரும் தங்களுடைய பழைய பொற்காலத்தை எண்ணி வருந்துகிறார்கள். 2009 ஆம் ஆண்டு சராசரி ஊதியத்துடன் ஒப்பிடும்போது அப்போதும் இது ஒரு விலை உயர்ந்த ஹோட்டலாகவே கருதப்பட்டது. இந்தப் பதிவு தற்போதைய விலைவாசி உயர்வு குறித்த ஆரோக்கியமான விவாதத்தை இணையத்தில் ஏற்படுத்தி உள்ளது.
