திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி(32), இவரது மனைவி வசந்தி(26). இந்த தம்பதியினருக்கு ரியாஸ்(5), ரிஸ்வான்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். வழக்கமாக கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளை அங்கன்வாடி மையத்தில் விட்டு விட்டு வேலைக்கு செல்வார்கள். ஆனால் இன்று அங்கன்வாடி மையம் விடுமுறை என்பதால் இரண்டு பிள்ளைகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்கு சென்றனர்.
ஆனால் வீட்டை பூட்டாமல் திறந்தபடியே சென்றதால் இரண்டு சிறுவர்களும் பொன்னியம்மன் கோவில் குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு சிறுவர்களும் குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
