நண்பேன்டா…. ரூ.28 கோடி சொத்து… நண்பருக்கு உயில் எழுதிய 19 வயது வாலிபர்…. பின்னணியில் இருக்கும் அந்த வியக்கவைக்கும் காரணம்…!

By Nanthini on ஆடி 13, 2026

Spread the love

சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த லீ என்ற 19 வயது மாணவர், தனக்குச் சொந்தமான 20 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 கோடி) சொத்துக்கள் அனைத்தையும் தனது நீண்ட கால நண்பருக்கு உயில் எழுதி வைத்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லீ-யின் பெற்றோர் இருவரும் விவாகரத்து பெற்று, தத்தமது புதிய துணைகளுடன் மறுமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் லீ-க்கு அன்பளிப்பாக வழங்கிய வீடு மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளையே, அவர் தற்போது ஷாங்காயில் உள்ள உயில் பதிவு மையத்தில் அதிகாரப்பூர்வமாகத் தனது நண்பரின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

இந்த அதிரடி முடிவிற்கான காரணத்தை மாணவர் லீ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தீவிர சாகச விளையாட்டுகளில் (Adventure Sports) அதிக ஆர்வம் கொண்டவரான லீ, எதிர்பாராதவிதமாக ஏதேனும் விபத்தில் தான் உயிரிழக்க நேரிட்டால், தனது சொத்துக்கள் தான் விரும்பும் சரியான நபருக்குச் சென்றடைய வேண்டும் என்று கருதியுள்ளார். மேலும், தனது பெற்றோரின் தற்போதைய புதிய துணைகளை அவர் முற்றிலும் அந்நியர்களாகவே பார்ப்பதால், அவர்கள் யாரும் தனது சொத்தை அனுபவிப்பதை அவர் விரும்பவில்லை. பெற்றோரை விட, இக்கட்டான சூழ்நிலைகளில் தனக்குத் துணையாக நின்ற தனது நீண்ட கால நண்பரே இந்த சொத்துகளுக்குப் பொருத்தமானவர் என்று லீ உறுதியாக நம்புகிறார்.

   

பொதுவாக வாரிசுரிமை அடிப்படையில், திருமணமாகாத ஒரு நபரின் சொத்துக்கள் சட்டப்படி அவரது பெற்றோர்களுக்கே சென்றடையும். ஆனால், சீனாவின் தற்போதைய வாரிசுரிமைச் சட்டத்தின்படி, திருமணமாகாத மற்றும் குழந்தைகள் இல்லாத ஒரு நபர், தனது சொத்துக்களை இரத்த உறவு அல்லாத பிற நபர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ உயில் எழுதி வைக்க முழு அனுமதி அளிக்கிறது. இந்த சட்டப்பூர்வ வாய்ப்பைப் பயன்படுத்தியே லீ தனது உயிலை முறைப்படி பதிவு செய்துள்ளார். குடும்ப உறவுகளின் விரிசலையும், நட்பின் ஆழத்தையும் உணர்த்தும் இந்த விசித்திரமான சம்பவம் தற்போது உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.