கரூர் மாவட்டத்தில் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட 19 காவலர்கள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தின் போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த அதிரடி மாற்றத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் தொடர்பாகத் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், நிர்வாகக் காரணங்களுக்காக கரூரில் பணிபுரிந்து வந்த மொத்தம் 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய உட்கோட்டங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் எனப் பலரும் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிய தவெக அரசுப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, கரூரில் பாதுகாப்புப் பணியில் சுணக்கம் காட்டியதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டிருப்பது அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
