விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மாடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், 17 வயது பள்ளி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மழையம்பட்டு தக்கா கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் விக்னேஷ், தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் மாடு கட்டியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி பூபதிக்கும் மாணவன் விக்னேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், சுப்பிரமணி, அவரது மகன் அஜித் மற்றும் பூபதி ஆகிய மூவரும் சேர்ந்து விக்னேஷைத் தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விக்னேஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நபர்களைத் தேடி வருவதுடன், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
