உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி… மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. குலை நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய 32 வயது நபரை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பரசலூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திரன் (32) என்ற நபரே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர் ஆவார். கட்டடக் பணிகளுக்குக் கம்பி பிட்டிங் செய்யும் தொழில் செய்து வந்த இவர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அச்சிறுமியைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். பாதிக்கப்பட்டவர் மைனர் சிறுமி என்பதால், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கும் காவல் துறைக்கும் தகவல் அளித்தது. விரைந்து வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விஜயேந்திரன் அச்சிறுமியின் அறியாமையைப் பயன்படுத்தி, பல்வேறு வாக்குறுதிகளை அளித்துத் தொடர்ச்சியாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

   

இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நல அலுவலகக் களப்பணியாளர் ஆரோக்கியராஜ் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா வழக்குப்பதிவு செய்தார். தலைமறைவாக முயன்ற விஜயேந்திரனைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

   

தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் குழந்தைகள் நலக்குழுவின் பராமரிப்பில் தேவையான மருத்துவ சிகிச்சைகளும், உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பது குறித்துக் கவலை தெரிவித்துள்ள குழந்தைகள் நல ஆர்வலர்கள், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு உரிய பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகள் ஆபத்துகள் குறித்துப் பயமின்றிப் பேசும் சூழலை வீட்டில் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.