சுற்றுலா சென்ற இடத்தில் இப்படி ஒரு சோகமா?…. 10 தமிழர்களின் உயிரைப் பறித்த நடுக்கடல் கொடூரம்…. முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல்….!

By SATHISH R on ஆடி 12, 2026

Spread the love

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பு குவாக் தீவுக்கு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் தீவிற்குச் சென்ற இந்த படகில் 17 தமிழர்கள் உட்பட மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 படகு ஊழியர்களும் இருந்துள்ளனர். இந்த கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 15 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் பெயர் விவரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முருக பிரபு, செந்தில் குமார், ஸ்ரீதர், ஷேக் அப்துல்லா, பாலாஜி, வினய குமார், ரவி சங்கர், சந்தோஷ் குமார், பாபு மற்றும் அழகுராஜன் ஆகியோரே அந்த துரதிர்ஷ்டசாலி தமிழர்கள் ஆவர். இவர்களது மறைவு அவர்களது குடும்பத்தினரிடமும், ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த துயரச் செய்தி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது ‘X’ சமூக ஊடகத் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கியவர்களின் விவரங்களை அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆறுதலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

   

விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகளை வழங்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து தூதரக நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன.