பூமியின் தாழ்வட்டப் பாதையில் கடந்த சில தசாப்தங்களாக மனிதர்களால் விண்ணில் செலுத்தப்பட்ட செயலற்ற செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் பாகங்கள் எனச் சுமார் 13,000 டன்களுக்கும் அதிகமான விண்வெளிக் கழிவுகள் மிதந்து வருகின்றன. இவை தற்போது கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி விழும் அபாயம் அதிகரித்து வருவதாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இக்கழிவுகள் விநாடிக்குச் சுமார் 7 கி.மீ என்ற அதிவேகத்தில் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இதனால், தற்போது பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்கள் மீது இவை மோதி பெரிய அளவிலான விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், ஆயுட்காலம் முடிந்த விண்கலங்கள் புவியீர்ப்பு விசையால் பூமிக்குத் திரும்பும்போது, அவற்றின் பெரிய உலோகப் பாகங்கள் வளிமண்டல உராய்வில் முழுமையாக எரியாமல் பூமியின் மேற்பரப்பில் வந்து விழும் ஆபத்தும் நிலவுகிறது.
நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை மற்றும் சீனா ஆகியவை இந்த விண்வெளிக் கழிவுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. அதேவேளையில், சுவிட்சர்லாந்து போன்ற சர்வதேச அமைப்புகள் ‘ரோபோடிக் கை’ மற்றும் காந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விண்வெளி குப்பைகளைச் சேகரித்து அழிக்கும் நவீன முறைகளைச் சோதித்து வருகின்றன.
