குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் அன்க்லேஷ்வர் பகுதியில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக தனஞ்சய் ராமாவதார் சிங் (63) என்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதாகக் கூறி தனியாக வரவழைத்த அந்த நபர், சிறுமியைத் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தத் தொடர் துன்புறுத்தலால் அந்தச் சிறுமி தற்போது ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவரின் கொடூரச் செயல் உறுதியானதை அடுத்து, அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கல்வி கற்கச் சென்ற இடத்தில் மாணவிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
