இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றான ஹரியானாவின் குருகிராம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் துப்பாக்கிச் சத்தத்தால் அதிர்ந்தது. அங்குள்ள ‘சுஷாந்த் லோக்’ என்ற உயர்தர குடியிருப்புப் பகுதியில், போலீசாருக்கும் ஆயுதமேந்திய ஒரு கும்பலுக்கும் இடையே வெறும் இரண்டு நிமிடங்களில் 60-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பரிமாறப்பட்டன. சினிமா பாணியில் நிகழ்ந்த இந்த அதிரடி மோதலில், சம்பவ இடத்திலேயே குற்றக் கும்பலைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயமடைந்தார். மேலும், இச்சண்டையில் மூன்று போலீசாரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து செயல்பட்டு வரும் பிரபல குற்ற கும்பல் தலைவனான தீபக் நந்தால் என்பவனின் ஆட்களே இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குருகிராமைச் சேர்ந்த 36 வயது தொழிலதிபர் ஒருவரை மிரட்டி ரூ. 10 கோடி பறிக்க இக்கும்பல் திட்டமிட்டிருந்தது. தொழிலதிபருக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்திருந்ததால், உளவுத்துறை தகவலின்படி போலீசார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த வாகனத்தை போலீசார் மறித்தபோது, அதிலிருந்த ஆயுததாரிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கியதே இந்த மோதலுக்குக் காரணமாகும்.
ஒரு காலத்தில் இசைத் துறையோடு தொடர்புடையவராகக் கூறப்படும் தீபக் நந்தால், பின்னர் குற்ற உலகில் நுழைந்து தற்போது வெளிநாட்டிலிருந்து கொண்டே தொழிலதிபர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களைக் குறிவைத்து மிரட்டல் வசூலில் ஈடுபட்டு வருகிறான். இம்முறை அந்த தொழிலதிபரைப் பணயக் கைதியாகப் பிடித்துச் செல்லவும் இ கும்பல் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதற்காக அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண்களை மறைத்து, போலீசாரிடம் இருந்து தப்பிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நிறைந்த ஒரு பாதுகாப்பான நகர்ப்புறத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் இவ்வளவு துணிச்சலாகச் செயல்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களிடையே பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து குருகிராம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதுடன், இதுபோன்ற மிரட்டல் கும்பல்களை ஆரம்பக் கட்டத்திலேயே ஒடுக்க உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
