இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ விடைபெறும் நிலையில், அதற்கு மாற்றாக மத்திய அரசு ‘விக்சித் பாரத் – ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்’ என்ற புதிய மெகா திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. வரும் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கும் இப்புதிய திட்டத்தின் மூலம், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வேலை நாட்களின் எண்ணிக்கை 100 நாட்களிலிருந்து 125 நாட்களாகச் சட்டப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த கூடுதல் 25 நாட்கள், வாழ்வாதாரத்திற்காக மக்கள் நகர்ப்புறங்களை நோக்கிப் புலம் பெயர்வதைத் தடுத்து, உள்ளூரிலேயே நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்கப் பெரிதும் உதவும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இப்புதிய திட்டத்தின் முதற்கட்டச் செயல்பாட்டிற்காக மத்திய அரசு இடைக்கால நிதியாக ரூ. 95,692 கோடி தொகையை ஒதுக்கியுள்ளதுடன், நிர்வாக மாற்றத்தின்போது மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. பயனாளிகளுக்குப் புதிய ‘கிராமின் ரோஜ்கார் உத்தரவாத அட்டைகள்’ கிடைக்கும் வரை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இ-கேஒய்சி (e-KYC) சரிபார்க்கப்பட்ட பழைய வேலை அட்டைகளே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்க்க, வாராந்திர அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்களின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குகளில் ‘நேரடிப் பணப்பரிமாற்றம்’ (DBT) மூலம் ஊதியம் நேரடியாகச் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திட்டத்தை நாடு முழுவதும் எவ்விதத் தொய்வுமின்றி கண்காணிக்க 100-க்கும் மேற்பட்ட சிறப்பு மண்டல அதிகாரிகள் (Zonal Officers) நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சிகளும் அண்மையில் புது தில்லியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
முறைகேடுகளை முற்றுப்புள்ளியாக ஒழிக்க இத்திட்டத்தில் அதிநவீன டிஜிட்டல் ஆயுதங்கள் புகுத்தப்பட்டுள்ளன. போலி வருகைப்பதிவைத் தடுக்க, தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலிருந்தே அவர்களின் வருகையைப் பதிவு செய்யும் ‘முகம் கண்டறியும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை’ கட்டாயமாக்கப்படுகிறது. பயனாளிகள் அனைவரின் விபரங்களும் ஆதார் அடிப்படையில் 100% துல்லியமாகச் சரிபார்க்கப்படுவதுடன், வேலைகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனைக் கண்காணிக்கப் பிரேகிய டிஜிட்டல் செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் ஏரி, குளம் வெட்டுவதோடு நிறுத்தாமல், கிராமப்புறச் சாலைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேளாண் சார்ந்த உள்கட்டமைப்புகளுக்கு இப்புதிய திட்டத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளதுடன், பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் சிறப்பு வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
மறுபுறம், இப்புதிய 125 நாள் வேலை திட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்ததாகவும், தற்போது அதிகாரிகள் விரும்பினால் மட்டுமே வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, ஜிஎஸ்டி வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை மற்றும் தண்டனை என்றும், கிராமப்புறப் பெண்கள் மற்றும் ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவது ஏமாற்று வேலை என்றும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
