டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. பீகாரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களின் மகளான அந்தச் சிறுமி, வறுமையின் காரணமாக டெல்லி மெஹ்ரௌலி பகுதியில் தன் குடும்பத்தினருடன் நடைபாதையில் வசித்து வந்துள்ளார். குடும்ப பாரத்தைச் சுமக்க தன்னுால் இயன்ற உதவியாக பலூன்கள் விற்பனை செய்து வந்த அந்தப் பிஞ்சு உயிரின் வாழ்க்கை, ஒரு கொடூரமான குற்றவாளியால் மிகக் கொடூரமாகப் பறிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் சிறுமி காணாமல் போனதை அறிந்த பெற்றோர், பதற்றத்துடன் மெஹ்ரௌலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, செயலி மூலம் இயங்கும் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையை முடுக்கிவிட்ட காவல்துறை, பப்லு என்ற 25 வயது நபரை வெறும் நான்கு மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், மெஹ்ரௌலி சிடிஆர் சௌக் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒப்புக் கொண்டுள்ளார். சிறுமியை காரில் குருகிராம் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க அவரைக் கொலை செய்துவிட்டு உடலை மறைத்ததாகவும் தெரிவித்துள்ளார். குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மெஹ்ரௌலி வனப்பகுதியில் இருந்து சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும், பொதுமக்களிடையே கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், ஆதரவற்ற நிலையில் வீதிகளில் வாழும் எளிய மக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.
