கோரக்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் அக்காவிற்கு உணவு கொடுக்க வந்த 10 வயது சிறுமி, காவலர் உடையில் பைக் வாகனத்தில் வந்த நபரால் கடத்தப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் உணவை வழங்கிவிட்டு சிறுமி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அந்த நபர் சிறுமியை அணுகி தனது பைக்கில் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமியை எங்கு அழைத்துச் சென்றார் என்பது தெரியாத நிலையில், குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சிறுமியின் தந்தை கோட்வாலி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசம்கர் மாவட்டம் கப்தான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தந்தை, கடந்த நான்கு ஆண்டுகளாக கோரக்பூரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இ-ரிக்ஷா ஓட்டி வரும் நிலையில், ஜூலை 27 அன்று இவரது 13 வயது மூத்த மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜூலை 28 செவ்வாய்க்கிழமை இரவு 8:30 மணியளவில் 10 வயதுடைய இரண்டாவது மகள் அக்காவிற்கு உணவு கொண்டு வந்தபோதே இச்சம்பவம் நடந்துள்ளது.
