நடுரோட்டில் ஆட்டோவை மறித்த 10 பேர்.. அலறியபடி கடத்தப்பட்ட புதுப்பெண்… அடுத்த 3 மணிநேரத்தில் போலீஸ் நடத்திய அதிரடி…!

By SATHISH R on ஆடி 5, 2026

Spread the love

காதல் திருமணம் செய்துகொண்டதற்காக ஒரு பெண்ணை அவரது குடும்பத்தாரே பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து ஆட்டோவை மறித்துக் கடத்திய துணிகரச் சம்பவம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை சித்தாநத்தத்தைச் சேர்ந்த அஜீத்குமார் (27) என்பவரும், முடுக்குப்பட்டியைச் சேர்ந்த சித்திரை வள்ளி (26) என்பவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த இவர்களின் காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி வயலூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்திலும் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், மகள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுவிட்டதாக சித்திரை வள்ளியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்காக இந்த ஜோடி காவல் நிலையம் வந்துள்ளது. விசாரணை முடிந்து அவர்கள் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பெண் வீட்டார் இரண்டு கார்களில் வந்து ஆட்டோவை வழிமறித்துள்ளனர். அஜீத்குமார் தடுத்ததையும் மீறி, அவரை கீழே தள்ளி அடித்துவிட்டு சித்திரை வள்ளியைப் பலவந்தமாகக் காரில் கடத்திச் சென்றனர். கணவன் அஜீத்குமார் காரை கைகளால் தாக்கித் தன் மனைவியைக் காப்பாற்றப் போராடியும் பலனில்லாமல் போனதால், உடனடியாக மணப்பாறை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

   

வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாகப் பல தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட 3 மணி நேரத்திற்குள், யாகபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சித்திரை வள்ளியைப் பத்திரமாக மீட்ட போலீசார், அவரை மீண்டும் கணவனிடம் ஒப்படைத்தனர். இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் மலைச்சாமி, அக்கா கணவர் முருகேசன், அவரது தம்பி பிரகாஷ் ஆகிய மூன்று பேரைக் கைது செய்ததோடு, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெண்ணின் தம்பி அழகர்சாமி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.