“கோயில் நிலத்தை விற்க 10 நாள் மாஸ்டர் பிளான்…!” ரூ.100 கோடி பழனி கோயில்… நில மோசடி எப்படி நடந்தது…? திமுக வெளியிட்ட பகீர் டைம்லைன்…!!

By Swetha on ஆடி 16, 2026

Spread the love

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து, முதலமைச்சர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்தி வரும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மோசடியில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு தொடர்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், தன் மீதான அவதூறுகளுக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், இந்த நில மோசடி என்பது ஒரு சாதாரண நிர்வாகத் தவறு கிடையாது, மாறாக 10 நாட்களில் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு ‘ஹெய்ஸ்ட்’ எனக் கூறி திமுக அதிகாரப்பூர்வ கால அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, இந்த நிலத்திற்குத் தானே தக்கார் என்றும், நீதிமன்ற உத்தரவு உள்ளதால் இதற்குப் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்றும் சார்பதிவாளருக்கு ஆட்சேபனைக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், ஜூலை 3, 2026 அன்று தனியார் தரப்பு நிலப் பதிவு ஆவணங்களைத் தாக்கல் செய்த அதே நாளில், ஆட்சேபனை தெரிவித்த இணை ஆணையர் மாரிமுத்துவை சென்னைக்கு மாற்றும் தற்காலிக பதவி உயர்வு கோப்பு அறநிலையத்துறையால் பிறப்பிக்கப்பட்டது.

   

இதனைத் தொடர்ந்து ஜூலை 6 அன்று வழக்கமான சார்பதிவாளர் திட்டமிட்டு விடுப்பில் செல்ல, கொடைக்கானலில் இருந்து ஜஸ்டின் மணிகண்டன் என்ற சார்பதிவாளர் ஒரு நாள் பொறுப்பாக வரவழைக்கப்பட்டு, 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் 2 கோடிக்கு முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டது. பதிவு முடிந்த மூன்றாவது நாளில், இணை ஆணையர் மாரிமுத்துவின் பதவி உயர்வு ஆணை அமல்படுத்தப்பட்டு அவர் சென்னைக்கு மாற்றப்பட்டார். இறுதியாக ஜூலை 14 அன்று இந்த விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டு விடுப்பு கொடுத்து, மாற்று அதிகாரி மூலம் இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது என கடும் கண்டனம் தெரிவித்து, இந்த விபரப் பத்திரப்பதிவை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.