மும்பையின் அடையாளமான பந்த்ரா-வொர்லி கடல் பாலம் (Sea Link) அருகே இளைஞர் ஒருவர் எவ்வித அசைவும் இன்றி, நீண்ட நேரமாக விசித்திரமான நிலையில் சிலையாக நின்று கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரின் உடல்நிலை மற்றும் நடத்தை, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் ‘ஸைலாசின்’ (Xylazine) எனப்படும் ‘ஜாம்பி டிரக்’ போதைப் பொருளைப் பயன்படுத்தியவர்களின் அறிகுறிகளுடன் ஒத்துப் போவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ‘ஜாம்பி டிரக்’ மனிதர்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, அவர்களைச் சுயநினைவற்ற நிலைக்குத் தள்ளுவதுடன், பார்ப்பதற்கு உயிருள்ள பிணங்களைப் போல (Zombies) மாற்றும் தன்மை கொண்டது. மும்பையில் இதுவரை இதுபோன்ற போதைப் புழக்கம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், இந்த வைரல் வீடியோ பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இந்த கொடிய போதைப் பொருள் மும்பை இளைஞர்களிடையே ஊடுருவத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
View this post on Instagram
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மும்பை காவல்துறையினர், வீடியோவில் உள்ள இளைஞர் யார்? அவர் உண்மையில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறி வரும் இந்த போதை கலாச்சாரம் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு தேவை என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
