ஜீ 5 தொலைக்காட்சியின் ‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சியில், Gen Z தலைமுறைப் பெண் ஒருவர் தனது வருங்காலக் கணவர் குறித்த எதிர்பார்ப்புகளைப் பேசிய விதம் தற்போது இணையத்தில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாதம் ரூ.3 லட்சம் சம்பளம், சொந்த பிசினஸ், தாடி, கேடிஎம் பைக் எனத் தொடங்கிய அவரின் எதிர்பார்ப்பு பட்டியல், “என் கணவருக்கு நானே மது ஊற்றிக் கொடுக்க வேண்டும்” என்ற கனவில் முடிந்தது. சிறு வயதில் தன் தாய், தந்தையைக் குடிக்கக் கூடாது என்று தடுத்து அதனால் குடும்பத்தில் எழுந்த தகராறுகளைப் பார்த்ததே, தான் கணவருக்கு மது ஊற்றிக் கொடுக்க நினைப்பதற்குக் காரணம் என்றும் அவர் கூறிய விளக்கமும், அதற்கு நெறியாளர் ஆவுடையப்பனின் கேள்விகளும் நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களது காட்டமான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். 20-களில் இருக்கும் ஒரு இளைஞர் மாதம் ₹3 லட்சம் சம்பாதிப்பது என்பது சாதாரணமாக நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல என்றும், அதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் தியாகமும் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், அவ்வளவு பெரிய தொகையை ஈட்டும் ஒரு நபர், தன்னைப் போலவே பொருளாதாரம் மற்றும் தகுதியில் சமமாக இருக்கும் பெண்ணையே தேடுவார் என்ற நடைமுறை உலகையும் பலரும் நினைவூட்டி, அந்தப் பெண்ணின் கனவைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
Gen Z தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு நிஜ உலகத்திற்குப் புறம்பாக மாறியுள்ளன என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமூக ஊடகங்களின் தாக்கம், ஆடம்பர வாழ்க்கை முறையை மட்டுமே முன்னிலைப்படுத்தும் ரீல்ஸ்களின் மாய உலகமே இளைஞர்களின் இத்தகைய அதீத எதிர்பார்ப்புகளுக்கு முக்கியக் காரணம். திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் காட்டப்படும் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட (Romanticized) வாழ்வியலை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே, வாழ்க்கைத் துணை குறித்த இத்தகைய முதிர்ச்சியற்ற எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது.
இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகள் நீடித்தால், எதிர்காலத்தில் சராசரிப் பின்புலம் கொண்ட பல இளைஞர்களுக்குத் திருமணமே நடக்காமல் போகும் அல்லது திருமணங்கள் நிலைக்காமல் உடையும் சூழல் உருவாகும் என்ற எச்சரிக்கையும் எழுகிறது. காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கைத் துணை என்பதெல்லாம் வெறும் ஆடம்பர ஆசைகளும், விசித்திரக் கனவுகளும் அல்ல; மாறாகப் பரஸ்பரப் புரிதல், சகிப்புத்தன்மை மற்றும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதை இளம்தலைமுறையினர் உணர வேண்டியது அவசியமாகும்.
