மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ரச்னா குர்ஜார் (Rachna Gurjar), அண்மையில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனக்குச் சொந்தமான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் சொகுசு வாழ்க்கை முறையைக் காட்டி வீடியோக்களைப் பகிர்ந்திருந்தார். அவர் வீடியோக்களை வெளியிட்ட சில நாட்களிலேயே, நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பெரிய அளவில் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஆடம்பரப் பதிவுகளே இந்தத் திருட்டுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. திருடர்கள் வீட்டின் எல்லை வேலியில் இருந்த முள் கம்பிகளை கட் செய்கரால் துண்டித்துவிட்டு, ஏணியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்துள்ளனர். மேலும், தங்களின் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் சிசிடிவி கேமராக்களை நீண்ட தடியைப் பயன்படுத்தி மேல்நோக்கித் திருப்பி வைத்துள்ளனர். பின்னர், ரச்னாவும் அவரது கணவரும் தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு, அலமாரிகளை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர்.
இந்தத் துணிகரத் திருட்டில் ₹1.91 லட்சம் ரொக்கப் பணம், தங்க மங்களசூத்திரம், நான்கு தங்க மோதிரங்கள் மற்றும் பாரம்பரிய வெள்ளி நகைகள் என சுமார் 7 முதல் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன. நகைகள் மற்றும் பணத்துடன் சேர்த்து, வீட்டில் வைக்கப்பட்டிருந்த எனர்ஜி டிரிங்க்ஸ் (Energy drinks) அடங்கிய பெட்டியையும் திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அதிகாலையில் ரச்னா எழுந்து பார்த்தபோது அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
