மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்திலுள்ள இட்மா நீர்வீழ்ச்சிக்கு விடுமுறை தினத்தைக் கொண்டாடச் சென்ற இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்களுக்காக ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரோட்டத்தின் வேகம் அதிகரித்ததால், அவர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். நீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்த ஒரு பாறையைப் பிடித்துக்கொண்டு உயிருக்குப் போராடியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அத்ரைலா காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் அவரது குழுவினர், உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் இறங்கினர். கொட்டும் நீர் மற்றும் வழுக்கும் பாறைகளுக்கு இடையே மிகவும் சவாலான முறையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிராம மக்கள் மற்றும் காவல்துறையினரின் துணிச்சலான முயற்சியால் அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். பாறைகளில் மோதியதில் அவருக்குச் சில காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆபத்தான இடங்களில் இதுபோன்ற வீடியோக்களை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
