தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, வாகனத்தில் ஏற முயன்ற இளைஞர் ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விசிக வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து வாக்குச் சேகரித்த திருமாவளவன், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் தொண்டர்களைக் கட்டுக்கோப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார். இருப்பினும், ஒரு இளைஞர் அத்துமீறி வாகனத்தின் முன் பகுதியில் ஏறியதால் ஆத்திரமடைந்த திருமாவளவன், அவரைத் தடுத்து கன்னத்தில் அறைந்து கீழே இறங்குமாறு கூறினார்.
இந்தச் சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகளும், நடிகை விந்தியா போன்ற விமர்சகர்களும் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, “திமுகவுக்கு சைடு டிஷ் திருமா” என்பது போன்ற கிண்டல்களும், அவர் தொண்டர்களைக் கண்ணியக் குறைவாக நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததால்தான் திருமாவளவன் அவ்வாறு நடந்துகொண்டார் என்ற தகவலும் ஒருபுறம் பரவியது. இதனால் இணையதளங்களில் இந்தப் பிரச்சனை பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், திருமாவளவனிடம் அறை வாங்கிய அந்த இளைஞர் தற்போது வீடியோ ஒன்றின் மூலம் உருக்கமான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், தான் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், தனக்கு மது அருந்தும் பழக்கமே கிடையாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பகுதிக்குத் தலைவர் வந்ததால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கிலும், அவர் மீது கொண்ட பாசத்தினாலுமே வாகனத்தில் ஏறி முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த இளைஞர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது விளக்கத்தில், “தலைவர் என்னை அடித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை; மாறாக மகிழ்ச்சியே. என் தந்தை என்னை அடித்தால் எப்படி எடுத்துக் கொள்வேனோ, அதேபோல்தான் இதையும் கருதுகிறேன். எனது நன்மைக்காகவும், ஒழுக்கத்திற்காகவும் அவர் என்னை அடித்ததாகவே நினைக்கிறேன்,” என்று அந்த இளைஞர் கூறியுள்ளார். இதன் மூலம் திருமாவளவன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு, தலைவன் – தொண்டன் இடையிலான இந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு விசிக வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
