உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், தனது மனைவியின் சித்தியைக் காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக 26 வயது இளைஞர் பிடிவாதம் பிடித்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைன்புரியைச் சேர்ந்த தேஜ்வீர் என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இதனிடையே, கணவரை இழந்து 5 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த மனைவியின் சித்தியான 45 வயது லதாவின் வீட்டிற்கு தேஜ்வீர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களாக திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததையடுத்து, இருவரையும் பிரித்து வைக்க உறவினர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், தங்களால் ஒருவரையொருவர் பிரிய முடியாது என்பதில் இருவரும் பிடிவாதமாக இருந்தனர். ஒருகட்டத்தில், லதாவை அழைத்துக் கொண்டு தேஜ்வீர் நேரடியாகக் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தான் அந்தப் பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும், மனைவியின் முடிவைப் பற்றிப் கவலையில்லை என்றும் கூறிய அவர், லதாவின் 5 குழந்தைகளையும் தானே பொறுப்பேற்றுப் பராமரிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதேசமயம், லதாவின் பிள்ளைகளும் குடும்பத்தினரும் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக லதாவின் மூத்த மகன் அன்ஷுல், குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது தாயும் தேஜ்வீரும் கடும் கோபமடைந்ததாகக் கூறியுள்ளார். மேலும், இருவரையும் பிரிக்க முயன்றபோது வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தீ வைக்க முயன்றதாகவும், “நாங்கள் ஒன்றாக வாழ்வோம், இல்லையென்றால் சுட்டுப் பொசுக்கி விடுவோம்” எனத் சொந்தத் தாயே தங்களை மிரட்டியதாகவும் அவர் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குடும்பத்தினரிடையே வெடித்துள்ள இந்த மோதல் மற்றும் மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாகப் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தீ வைக்க முயற்சி நடந்ததா மற்றும் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்துப் புகார்களின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மனைவியின் சித்தியுடன் இளைஞர் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டு, அவரை மணக்க முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
