சென்னையில், திருமண வரன் தேடும் செயலிகள் மூலம் பெண்களைக் குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கோபிநாதன் (25) என்ற இளைஞரைத் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தன்னை ஒரு தொழிலதிபர், சினிமாப் பிரபலம், தயாரிப்பாளர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.
கோபிநாதன், விலை உயர்ந்த கார் மற்றும் ஆடம்பர பங்களாவில் இருப்பது போன்ற புகைப்படங்களைப் பயன்படுத்தி பெண்களை எளிதாக வலையில் வீழ்த்தியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு, ஐ.டி. துறையில் இன்ஜினியராகப் பணியாற்றும் ஒரு பெண், இரண்டு மாதங்களாக அவருடன் பழகியுள்ளார்.
பின்னர் கோபிநாதன், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது எனக் காரணம் காட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து முதற்கட்டமாக ரூ. 20 ஆயிரமும், பிறகு வேலையாளுக்கு இதய அறுவை சிகிச்சை எனப் பல பொய்களைச் சொல்லி, மொத்தம் ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளார்.
திருமணப் பேச்சை எடுத்தபோது கோபிநாதன் தட்டிக் கழித்ததால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண், தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் அவரைக் கண்காணித்துள்ளார். அப்போது கோபிநாதன் ஒரு போலி தொழிலதிபர் என்பதும், தன்னைப் போலவே ஐ.டி. ஊழியர்கள் முதல் மருத்துவர்கள் வரை 12 பெண்களை ஏமாற்றியதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் சிக்கியுள்ளன. இந்த வீடியோக்களை வைத்து யாரையேனும் மிரட்டிப் பணம் பறித்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கோபிநாதனை கைது செய்த போலீசார் அவரைப் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
