“முதலில் 40 ஆயிரம் லாபம்… அப்புறம் 20 லட்சம் அவுட்”…. நீலகிரி அதிகாரியை வளைத்துப் போட்ட ‘பெங்களூரு ஸ்வேதா’…. பகீர் பிண்ணனி….!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

இன்றைய டிஜிட்டல் உலகில் டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனைப் பயன்படுத்தி நூதன முறையில் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், பொழுதுபோக்கிற்காக டேட்டிங் செயலி ஒன்றில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது பெங்களூருவைச் சேர்ந்த ‘ஜெயஸ்ரீ ஸ்வேதா’ என்ற பெயரில் ஒரு இளம்பெண் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் சில காலம் அலைபேசி வாயிலாக நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.

அந்த இளம்பெண் தான் பெங்களூருவில் அழகு நிலையம் நடத்தி வருவதாகவும், கூடுதல் வருமானத்திற்காக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டி வருவதாகவும் கூறி அந்த அதிகாரியை நம்ப வைத்துள்ளார். இதற்காக ஒரு போலி இணையதள முகவரியையும் அவருக்கு வழங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சை உண்மை என்று நம்பிய அரசு அதிகாரி, ஆரம்பத்தில் ஆசைக்காக ரூ.43,000 முதலீடு செய்துள்ளார். அதற்கு உடனடியாக லாபத் தொகை திரும்பக் கிடைத்ததால், அந்தப் பெண்ணின் மீது அவருக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

   

இந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளம்பெண், அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைவார்த்தை கூறி பெரும் தொகையை முதலீடு செய்யத் தூண்டியுள்ளார். இதனை நம்பி அந்த அதிகாரி பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.20 லட்சத்தை அந்த இணையதளத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால், பெரும் தொகையைச் செலுத்திய பிறகு, அவரால் அந்தப் பணத்தையோ அல்லது லாபத்தையோ திரும்பப் பெற முடியவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

   

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரசு அதிகாரி, உடனடியாக நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்தப் பெண் பயன்படுத்திய கணக்குகள் மற்றும் இணையதள முகவரிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறிமுகமில்லாத நபர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.