கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை செல்லும் சாலையோரத்தில், கடந்த மாதம் 11-ஆம் தேதி அரை கிலோ மீட்டர் இடைவெளியில் இரண்டு ஆண் சடலங்கள் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. சடலங்களை மீட்ட தாலுகா போலீசார், அவை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்த அந்த நபர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் அதிரடி விசாரணையில், எரிக்கப்பட்டவர்கள் பாலகுறி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்குமார் (36) மற்றும் அவரது தந்தை செல்லப்பன் (64) என்பது தெரியவந்தது. ராணுவ வீரரான மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவுக்கும் (29), மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (19) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இவர்களது உறவுக்கு மகேஷ்குமாரும், அவரது தந்தையும் இடையூறாக இருந்ததால், இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலங்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று தீ வைத்து எரித்தது அம்பலமானது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் தனிப்படை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இக்கொலைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சட்ட ஒழுங்கு பதற்றத்தையும் ஏற்படுத்தியதால், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் குற்றவாளிகளான பூவரசன் மற்றும் பானுப்பிரியா ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தனர். தற்போது பூவரசன் சேலம் மத்திய சிறையிலும், பானுப்பிரியா கோயம்புத்தூர் மகளிர் சிறப்பு சிறையிலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
