“ஐயோ என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாங்களே”…. கோவை ஜோதிடரை நம்பிச் சென்ற இளம்பெண்… 3 ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்த பேரதிர்ச்சி உண்மை..!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

திருப்பூரைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், பரிகாரம் என்ற பெயரில் தன்னை ஏமாற்றிப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கோவை துடியலூர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் கார்த்திகேயன் என்பவர் மீது கோவை சரக போலீஸ் ஐ.ஜி-யிடம் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். நீண்ட நாட்களாகத் திருமணம் தள்ளிப்போனதால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த இந்த இளம்பெண், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூலம் இந்த ஜோதிடரைச் சந்தித்துள்ளார். “சில பரிகாரங்கள் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்” எனக் கூறிய ஜோதிடர், பரிகாரம் செய்யும் சாக்கில் அவரைத் அடிக்கடி நேரில் வரவழைத்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல, ஜோதிடர் கார்த்திகேயன் அந்த இளம்பெண்ணைத்தானே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்திப் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஜோதிடரின் பொய் வார்த்தைகளை உண்மை என நம்பிய அந்த இளம்பெண், தனது திருமணத்திற்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார். மேலும், தொழில் கடன் மற்றும் உறவினர் விபத்தில் சிக்கிவிட்டார் எனக் கூறி அந்த ஜோதிடர் சுமார் ₹1.5 லட்சம் வரை சிறுகச் சிறுகப் பணத்தைப் பறித்துக்கொண்டு, திடீரெனப் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக்கொண்டார்.

   

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ஜோதிடரைப் பற்றித் தீர விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இது குறித்து நேரில் சென்று நியாயம் கேட்டபோது, அந்த ஜோதிடர் இளம்பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி, “எனக்கு உயர் போலீஸ் அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மிகவும் நெருக்கம்; அவர்களிடம் கூறி உன்னை இல்லாமல் செய்துவிடுவேன்” எனக் கூறித் தொடர் மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.

   

திருமண ஆசையைக் காட்டி வாழ்க்கையைச் சீரழித்த ஜோதிடர் கார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது உயிருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவின் படிகளைத் திருப்பூர் மாவட்ட எஸ்பி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் அவர் அனுப்பியுள்ளார். கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.