நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவரும், 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே அந்தப் பெண் தன்னுடைய குழந்தைகளையும் சிவந்திபுரத்தில் உள்ள தனது பெற்றோரின் பராமரிப்பில் விட்டுவிட்டு சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதியை சேர்ந்த 34 வயது இன்ஜினியர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அந்த இன்ஜினியரிடம் பேசிய பெண், தனக்கு 30 வயது தான் ஆகின்றது, இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து பேசிய அந்த பெண்ணுடன் இன்ஜினியருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது காதல் விவகாரத்தை இன்ஜினியர் பெற்றோரிடம் கூறியுள்ளார். பிறகு ஒரு வழியாக பெற்றோரை சமாதானம் செய்து அந்த பெண்ணை என்ஜினியர் கடந்த 30ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அதில் மணமகன் வீட்டார் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் பெண் வீட்டார் சார்பாக ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
இன்ஸ்டாகிராமில் தங்களுடைய திருமண விழாவில் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை மணமக்கள் இருவரும் பகிர்ந்தனர். இதனை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் முதல் கணவர் தனது உறவினர்களுடன் நேராக சிவந்திபுரம் பகுதிக்குச் சென்று அங்கு தனது மாமனார் மற்றும் மாமியாருடன் இருந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கு இரண்டாவது கணவர் வீட்டுக்கு வந்து முதல் கணவர் தரப்பினர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர். மணப்பெண் தாக்கப்பட்டது குறித்து இரண்டாவது மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் வந்தவர்களிடம் விசாரித்த போது புதுப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்த இரண்டு பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது.
இதனைக் கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணிடம் இருந்து ஐந்து பவுன் தாலிச் சங்கிலியை புது மாப்பிள்ளை பெற்றுக் கொண்டார். இருந்தாலும் இதுவரை 5 லட்சம் ரூபாய் வரை அந்த பெண்ணுக்காக செலவு செய்து ஏமாந்து விட்டேன், இனி அவள் எனக்கு வேண்டாம் என்று அங்கிருந்து ஏமாற்றத்துடன் என்ஜினியர் புறப்பட்டு சென்றார்.
இரண்டாவது திருமணம் செய்த அந்தப் பெண் தனக்கும் வேண்டாம் என்றும் அவளது குழந்தைகளை அவளே வைத்துக் கொள்ளட்டும் என்று முதல் கணவரும் கூறிவிட்டு அந்த குழந்தைகளை போலீசில் ஒப்படைத்துவிட்டு தனது உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்று விட்டார். தன்னுடைய பேராசையால் இரண்டு கணவர்களையும் இழந்து குழந்தைகளுடன் நிற்கதியாக நின்ற அந்தப் பெண் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
