“அக்கா கணவருடன் தொடர்பு.. ரகசியமாகப் பிறந்த குழந்தை”… முட்புதரில் வீசிய செவிலியர்… இளம்பெண் செய்த பகீர் காரியம்….!

By Nanthini on வைகாசி 7, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேரேகால்புதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபாஷினி, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரது உறவுக்கார சகோதரியின் கணவரான 43 வயது மதன்குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த சட்டவிரோத உறவின் காரணமாக சுபாஷினி கர்ப்பமடைந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு வீட்டில் வைத்து பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சக செவிலியர் ஒருவரின் உதவியுடன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய சுபாஷினி, பிறந்த சில மணி நேரத்திலேயே அக்குழந்தையை வீட்டின் அருகே இருந்த முட்புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

   

அப்பகுதி பொதுமக்கள் புதரில் கிடந்த குழந்தையின் உடலைப் பார்த்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், செவிலியர் சுபாஷினிக்கும் மதன்குமாருக்கும் இருந்த கள்ளத்தொடர்பு மற்றும் அதன் விளைவாகக் குழந்தை பிறந்த விபரீத உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. கைவிடப்பட்ட அந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி துடிதுடிக்க உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

   

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய மதன்குமாரை முதற்கட்டமாகக் கைது செய்தனர். மேலும், பெற்ற குழந்தையையே கொலை செய்த சுபாஷினியைக் கைது செய்து, தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூகத்தில் உயிரைக் காக்கும் செவிலியர் பணியில் இருந்த பெண்ணே, தனது கௌரவத்திற்காகக் குழந்தையைக் கொன்ற சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.