உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 19 வயதான சுமித்ரா என்ற இளம்பெண், மாதவிடாய் காலங்களில் கிராம எல்லைக்குள் குளிக்கக் கூடாது என்ற பழமைவாத மூடநம்பிக்கை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் பங்கேற்ற சுமித்ரா, ஊர் வழக்கப்படி குளிப்பதற்காகத் தனது கிராமத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்தாகினி ஆற்றிற்குத் தனியாகச் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக ஆற்றின் பலத்த ஓட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட அவரது சடலம், சனிக்கிழமை மீட்கப்பட்டது.
நவீன யுகத்திலும் பெண்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய மூடநம்பிக்கைப் பழக்கவழக்கங்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், எந்தவொரு பாரம்பரியமும் மனித உயிரை விட மேலானது அல்ல என்றும் கூறி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
