புதுச்சேரியைச் சேர்ந்த 28 வயதான ஷர்மிளா என்பவருக்கும், ஜோசப் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பாகத் தொடர்ந்துள்ளது. நாளடைவில், ஜோசப் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் ஷர்மிளாவுக்குத் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, ஜோசப் வேறு ஒரு பெண்ணுடனும் நெருங்கிய நட்பில் இருந்ததை அறிந்த ஷர்மிளா, அதிர்ச்சியடைந்து அவடனான நட்பை முழுமையாகத் துண்டித்துக் கொண்டார். ஜோசப்புடன் பேசுவதையும் அவர் அடியோடு நிறுத்திவிட்டார்.
தன்னை ஷர்மிளா தவிர்ப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ஜோசப், கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். மீண்டும் தன்னிடம் பேசுமாறு அவர் வற்புறுத்தியும் ஷர்மிளா இணங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தின் உச்சகட்டமாக, நேற்று முன்தினம் (மார்ச் 13) ஷர்மிளா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஜோசப் அவரை வழிமறித்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஷர்மிளா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதில் உடல் கருகிய ஷர்மிளா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய ஜோசப்பை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருதலைப்பட்சமான ஆத்திரத்தால் இளம்பெண் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
