கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பவானி என்ற இளம்பெண், பிஎஸ்சி பட்டப்படிப்பை முடித்துவிட்டு செல்போன் விற்பனை நிலையம் ஒன்றில் பில்லிங் பிரிவில் பணியாற்றி வந்தார். இதற்காக துளசி நகர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வந்த பவானிக்கு, சந்திரசேகர் (33) என்ற ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறவே, கடந்த ஆண்டு பெற்றோருக்கும் தெரியாமல் இருவரும் கோவிலில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு சந்திரசேகரின் நடத்தையில் சந்தேகமடைந்த பவானி, அவரைப் பற்றி தீர விசாரித்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. சந்திரசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. இந்த ஏமாற்று வேலை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த பவானி, சந்திரசேகருடன் வாழ விருப்பமில்லாமல் அவரை விட்டு பிரிய முடிவு செய்தார். மகளின் நிலையை உணர்ந்த பவானியின் குடும்பத்தினரும் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த ஜூன் 13 அன்று பவானியின் சமூக வலைதளக் கணக்கில், சந்திரசேகருடன் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் ‘ஸ்டோரி’யாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட உறவினர்கள், அவரது தந்தைக்குத் தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து பவானியைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த தந்தை, வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கவே, அவர் காவல்துறையினருடன் இணைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பவானி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதும், சந்திரசேகர் அருகில் மயங்கிக் கிடப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பவானியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சிகிச்சைக்குப் பின் குணமடைந்த சந்திரசேகரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொடூரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பவானி தன்னை விட்டுப் பிரிய மறுத்ததால், அவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்துக் கொல்ல சந்திரசேகர் முயன்றுள்ளார். ஆனால் பவானி அதை வாந்தி எடுத்ததால், எங்கே அவர் உயிர் பிழைத்துவிடுவாரோ என்ற ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக ஒப்புக்கொண்ட சந்திரசேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
